
கழுதையை நன்கு புடைத்தால் அது குதிரையாகுமென்று யாரோ சொல்லக் கேட்டு அவ்விதமே ஒருவன் செய்தான் என்று ஒரு கதையுண்டு. இத்தகைய முறையிலேயே நம் பிள்ளைகளுக்கு இப்போது கல்வி அளிக்கப்படுகிறது. இந்த முறை மாற வேண்டும். பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் தான் மட்டுமே கற்றுத் தருவதாக ஆசிரியர் எண்ணுகிறார். எல்லா ஞானமும் மனிதனுக்குள்ளே இருக்கிறது. அதை தூண்டி எழுப்புவதே ஆசிரியரின் பணி.
மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்கள் அடங்கிய கல்வி விபரங்களை நான் படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், நல்ல பண்பாட்டினையும் வளர்த்துக் கொள்வேன். அதன்பிறகு, மனம் பண்பட்டு விடும். மனம் என்னும் பண்பட்ட கருவி கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கொள்வேன்.
கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதன்று. அப்படி திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் அஜீரணத்தால் உனக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.
உன்னுடைய லட்சியம் ஜடப்பொருள் என்றால் ஜடப்பொருளாகவே நீ ஆகி விடுவாய். ஆன்மாவை அடைவது தான் நம்முடைய லட்சியம். அது ஒன்று தான் எல்லாமுமாக இருக்கிறது. அதை அடைவதே உண்மையான கல்வியாகும்.
