Wednesday, August 6, 2008

வாழ்க்கை கல்வியை படியுங்கள்


கழுதையை நன்கு புடைத்தால் அது குதிரையாகுமென்று யாரோ சொல்லக் கேட்டு அவ்விதமே ஒருவன் செய்தான் என்று ஒரு கதையுண்டு. இத்தகைய முறையிலேயே நம் பிள்ளைகளுக்கு இப்போது கல்வி அளிக்கப்படுகிறது. இந்த முறை மாற வேண்டும். பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் தான் மட்டுமே கற்றுத் தருவதாக ஆசிரியர் எண்ணுகிறார். எல்லா ஞானமும் மனிதனுக்குள்ளே இருக்கிறது. அதை தூண்டி எழுப்புவதே ஆசிரியரின் பணி.

மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்கள் அடங்கிய கல்வி விபரங்களை நான் படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், நல்ல பண்பாட்டினையும் வளர்த்துக் கொள்வேன். அதன்பிறகு, மனம் பண்பட்டு விடும். மனம் என்னும் பண்பட்ட கருவி கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கொள்வேன்.

கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதன்று. அப்படி திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் அஜீரணத்தால் உனக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

உன்னுடைய லட்சியம் ஜடப்பொருள் என்றால் ஜடப்பொருளாகவே நீ ஆகி விடுவாய். ஆன்மாவை அடைவது தான் நம்முடைய லட்சியம். அது ஒன்று தான் எல்லாமுமாக இருக்கிறது. அதை அடைவதே உண்மையான கல்வியாகும்.

உனக்கென ஒரு பாதை வேண்டும

உண்மை, தூய்மை, சுயநலமின்மை இந்த மூன்று குணங்களும் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலும் இல்லை, இந்த மண்ணுலகிலும் இல்லை. இந்த மூன்றினையும் பெற்றவனை பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து போரிடும் ஆற்றல் அவனுக்கு உண்டு. நீ செய்த தவறுகளை வாழ்த்தக் கற்றுக்கொள். அந்த தவறுகளே உனக்கு வழிகாட்டும் தெய்வங்கள். தவறு செய்தவன் மீண்டும் தவறான பாதைக்கு செல்ல மாட்டான். சரியான பாதையில் செல்வதற்கான முயற்சியை மேற்கொள்வான். அதனால், வாழ்வில் தவறினால் உண்டாகும் துன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.


நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர் மீது இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்று போகும் வரையிலும், மூளை கொதித்துப்போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அடுத்தவரின் பாதையை பின்பற்றாதீர்கள். ஏனெனில், அது அவருடைய பாதை. உங்களுடையது அல்ல. உங்களுடைய பாதையை கண்டுபிடித்து விட்டீர்களானால், அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை. அப்பாதையில் கைகளை குவித்த வண்ணம் சரணடைந்து விடுங்கள்.

புதிய இந்தியாவை உருவாக்குங்கள


உண்மை, அன்பு, நேர்மை ஆகியவற்றை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீ நேர்மை உள்ளவனாக இருக்கிறாயா? உயிருக்கே ஆபத்து வந்தாலும் சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? அன்பு செலுத்துபவனாக இருக்கிறாயா? அப்படியானால் மரணத்துக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.

பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித் தன்மையினாலும் அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. ஆனால், உண்மையான மதத்தின் தலை சிறந்த சமய போதனையாகவும், மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால்தான் பலவிதமான இன்ப துன்பங்களிலிருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவை பாதுகாத்து வைத்திருக்கிறார்.

நீங்கள் மகத்தான பணியை செய்ய பிறந்தவர்கள்தான் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய் குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்.

மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப் போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும். கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும்.